ஒளி

கவிஞனின் வழியாய் தன்னைத்தானே எழுதிக்கொண்ட திருப்தியில்
உறங்கச் செல்கிறது ஓர் கவிதை.

ஓளி ஆண்டுகளுக்கு அப்பால் புறப்பட்டிருக்கும் அடுத்த கவிதையின் ஒளியை நோக்கிக்கொண்டிருக்கிறான் கவி்.

கடைசிக் கதிர்

இருளும் என் விழி நிறைக்கும், அகன்ற வானம்;
என் உடல் நனைக்கும், எப்போதோ புறப்பட்ட நட்சத்திர ஒளி;
மகன் கையில் உயிர்த்திருக்கும், எனை அமரனாக்கும் பெருந்தீ.

பெரும்பொழுது சேர்ந்தே ரசித்த மேற்கு வானை
உற்று நோக்கும் அவன் பனித்த கண்களில் ஒளிர்ந்து மறையும்
அந்தியின் கடைசிக் கதிர்.

சுய விற்பனை

பகலினால் கைவிடப்பட்ட
கடைத் தெருவில்,
அன்று படி தாண்டிய
முதல் பண்டமென்ற
மகிழ்வுடன் எரியும் சூடத்தில்,
திருஷ்டியாய் என் வறுமை.

ஆலகாலம்

வெப்பம்கண்டு உடலில் தோன்றும்
வியர்வயைப் போன்று
மனதில் தோன்றும் வெறுமைக்கு
வேர் தேடித் திரிகின்றேன்.
சுட்டெறிக்கும் நினைவுகள்
சூழ்ந்திருக்கும் தனிமை
கோர்ந்திறுக்கும் கைப்பேசி
நகைக்கும் எதிர்பார்ப்புகள்
நிலையற்ற இருத்தல்
நங்கூரமிடா எண்ணங்கள்
இவற்றில் யாதெனெ அறியேன்!
வேரில்லாதொரு சர்ப்பமெனில்
விரைந்தென்னைத் தீண்டிச் செல்;
நஞ்சருந்தி வெப்பத்தைத்
தணித்துக் கொல்கின்றேன்.

கரைதல்

11988412_1157142024313103_2005643090469313586_n
எல்லோராலும் புறக்கணிக்கப்படுவதாய்,
அடைக்கலம் நாடி,
என் கால்கள் பற்றி மன்றாடும் உன்னை
நானும் புறக்கணிப்பதில்லை.
இதோ,
இரு கைகள் நீட்டி என் உடலைத் திறக்கிறேன்;
ஓடி அணைத்து உன்மத்தம் கொள்
மரணமே.

சங்கீதச் சாம்பல்கள்

 

 

தீயோடு மூங்கில்கள் மட்டுமல்ல
நேரங்களில் சங்கீதங்களும் சாம்பலாகும்
பரிச்சயமானவர்கள் கேட்டதுண்டு
அக்காட்டின் சங்கீதத்தை,
அதைப் பலர் இரசிப்பதைக் கண்டு
காடும் இரசித்தது.
மகிழ்ச்சியின் காலனாக
பரிச்சயமற்ற தீ ஒன்று
பதிவின்றி வந்தது
எப்பொழுதும் மூங்கில்களை
மட்டும் எரிக்கும் தீ
சங்கீதத்தையும் சேர்த்து எரித்தது
இப்பொழுது அக்காட்டின் இசை
நினைவென்று மாறிற்று
அக்காடு சுற்றாருக்கு
தீரா வெப்பத்தை தந்து
வடிவமற்ற இலக்கணமற்ற
இறைச்சலுடன், சாம்பலினிடையே
மூங்கில்களைத் தேடி…

வாசிப்பு அனுபவம் #1 : வெறும்முள்

குறிப்பு : இது விமர்சனமோ, திறனாய்வோ இல்லை. ஒரு உன்னத படைப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை, அனுபவத்தை பகிரும் முயற்சி மட்டுமே. மேற்கொண்டு படிக்கும் முன், http://www.jeyamohan.in/34886#.VdRqGJd57vR இந்த இணைப்பில் உள்ள கதையை வாசித்துவிட்டு தொடர்ந்தால் இன்னும் வசதியாய் இருக்கும்.

A bird of no nest...

செறிவான ஒரு கவிதையோ அல்லது ஆகச்சிறந்த ஒரு நாவலோ ஏற்படுத்தும் தாக்கத்தை, சிலிர்ப்பை, மன எழுச்சியை இலக்கியத்தரமான ஒரு சிறுகதை ஏற்படுத்தக்கூடும் என்று வெறும்முள் – சிறுகதை’ வாசிக்கும்வரை நான் யோசித்தது கூட இல்லை. இலக்கியத்தரம்/இலக்கிய அனுபவம் என்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட சரியான அளவுகோள் ஏதும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. அது நமது முதல் முத்தம் போல மிகவும் அந்தரங்கமான ஒன்று; அது ஆளுக்கு ஆள் ரொம்பவும் வேறுபடும், என்பதே தேர்ந்த வாசக நண்பர்களுடனான கலந்துரையாடலிலும், என் அளவிலான வாசிப்பிலும் நான் உணர்ந்தது. இலக்கியத்தரம் என்பதன் பண்பியல்புகளாக நான் நினைப்பது இவையே:

  1. வரம்புகளற்ற விஸ்தரிப்பின் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய சாரம். உதாரணமாக, ஈரடி வெண்பாவான குறள் ஒன்றை, ஒரு காப்பியத்தின் அளவிற்கு விரிக்கக்கூடும்.

  2. விழுமியங்களையும், பொது உணர்வுகளையும், சுற்றி புனையப்படுதல். உதாரணமாக, பாரதியின் “பாயும் ஒளி” பாடல் ஒட்டுமொத்த பெண்ணியத்தை நம் கண்முன் நிறுத்துகிறது.  நம் காதலியை இல்லை.

  3. தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை தருதல். அந்த அனுபவம் மன எழுச்சியாக, பெருங்கருணையாக, திறப்பாக பரிணாமம் அடைகிறது. நல்ல பயண அனுபவமும் இதையே செய்கிறது; அதைப்பற்றி வேறொரு பதிவில் பேசலாம்.

அத்தகைய சாரத்தையும், கிளர்ச்சியூட்டும் அனுபத்தையும் சிறுகதை ஒன்றில் புனைந்து தருவது என்பது ‘வெறும்முள்’-ல் சாத்தியப்பட்டிருக்கிறது என்பது என் துணிபு.

மதுவின் போதையை விட, அதைப் பருகையில் நிகழும் உரையாடல்களே அலாதியானவை. அவையே மதுவின் பலனை நிறைவு செய்வதாகவும், அதனாலேயே தனித்துப் பருகுவோர்க்கு போதையை விட வெறியே ஏறுவதாகவும் நான் நினைக்கிறேன். இதை ஆமோதிக்கும் விதமாகவே துவங்குகிறது இக்கதை.

சமேரிய பாலைவனத்தின் கோடைநாளொன்றில், சமேரியப் பெண் ரெபேக்காவின் மதுக்கடையில் நுரைத்துப் புளித்த யாயினை(wine) பருகி, உடற்சூட்டைத் தணித்தபடி பேசத் துவங்குகின்றனர் கிழக்கத்திய நாடோடி செழியனும், கிழட்டு குலப்பாடகன் தாமஸும். மதுவை அவர்களுக்குப் பரிமாரியபடி உரையாடலில் தானும் பங்கேற்கிறாள் ரெபேக்கா. இவர்களது உரையாடலே கதையின் வடிவம். இவர்களோடு எதுவும் பேசாது, செழியன் இனாமாய்த் தந்த யாயினைப் பருகியபடி, ஊமையைப் போல் கடையின் வாசலில் இருக்கின்றனர் கிறுக்கு  ஐசக்-ம் அவனது அழுக்கு மூட்டையும்.

கிழக்கத்திய நாடோடிகள் குறித்தும், வீரனாயிருந்த இளவயது ஐசக்-ஐ குறித்தும் பேசத்துவங்குகிறான் தாமஸ்; பின்னர் ரெபேக்காவின் ஆர்வ மிகுதியால் பேச்சு செழியன் யார் என்பதை நோக்கி நகர்ந்து, 30 ஆண்டுகளுக்கு முன் சமாரியாவில் தோன்றிய விசித்திர வால் நட்சத்திரம் குறித்து தீவிரமடைகிறது. அந்த வால் நட்சத்திரத்தின் அடையாளத்தை அப்போது செழியன் சந்தேகிக்க, இரு வேறு தீவிர உணர்வுகளுக்கு ஆளாகின்றனர் தாமஸும், ரெபேக்காவும். மொத்த உரையாடலும் முடியும்வரை தன் இடத்தில் இருந்து சற்றும் நகராது, பாலவனத்தின் பரந்த வெளியை அகன்று நோக்கும் பார்வையோடும் கிடக்கிறான் ஐசக்.

அப்போதுதான் நிகழ்கிறது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. திரளானோர் பின் தொடர கழுதையின் மீது ஏறி வருகிறான் யாரோ ஒரு தச்சன் மகன். வால் நட்சத்திரத்தின் அடையாளம் உணரப்பெற்ற குலப்பாடகன் தாமஸ் தச்சன் மகனைப் புறக்கணிக்கிறான். தச்சன் மகனை நோக்கி உந்தப்பட்டும், தனக்கும் தன் 32 ஆண்டுகால வாழ்நாள் தேடலுக்குமான தொலைவை இடைமறிக்கும் வெறும் முட்புதருக்கு அஞ்சி நிற்கிறான் செழியன்.

“உடம்பெங்கும் ரத்தத்துடன் கருப்பைவிட்டு வெளியே பாய்ந்தோடும் குழந்தைபோல ஐசக் ஓடிக்கொண்டிருந்தான். அவனுடைய மூட்டை ரெபெக்காவின் கடை வாசலில் கிடந்தது.” இப்படியாக முடிகிறது கதை.

மேலே உள்ள இந்த இரு வரிகளே கதையை உச்சத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. சிதறிக் கிடக்கும் மொத்த உரையாடலும், கதையின் அத்துனை விஸ்தரிப்பும், அவ்விரு வரிகளால் பிணைக்கப்பட்டு அர்த்தம் பெறுகின்றன. இவ்விரு வரிகளைக் கொண்டு இக்கதையை எல்லைகளின்றி விரிக்க இயலவதாய் உணர்கிறேன் நான். இக்கதையின் கட்டமைப்பும், கதாபாத்திரங்களும் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இக்கதையை மேற்கூறப்பட்ட இலக்கியப் பண்பியல்புகளோடு ஒப்பிட்டு அணுகினால் எழும் கேள்விகளைஆராய்ந்தால் கதையின் விஸ்தாரமும் ஆழமும் இன்னும் விளங்குகின்றன.

பாலைவனமும் – ரெபேக்காவும்:

பாலைவனத்தின் அடையாளமே அதன் நிரந்தரமின்மைதான். மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பு; நிரந்தரம் என ஒரு மணற்குன்றோ, சுவடோ கூட இருக்காது. எல்லாவற்றையும் காற்று அழித்துவிடும். நிரந்தரம் என்று எதுவும் இல்லாத தொலைந்தவர்களின் நிலம் அது. மனிதன் வாழும் மண்ணே (திணையே) அவன் வாழ்க்கை முறையை நிர்ணயம் செய்கிறது. பாலைநிலமும் அதன் குடிகளும் உலகத்தால் கைவிடப்பட்டவர்கள். அவர்கள் அடிமைகள். `கைவிடப்பட்டவர்களுக்காகவே நான் வந்தேன்’ என்கிற மீட்பரின் குரலுக்காக காத்திருக்கும் அடிமைகள். நாடோடிகளின் பெரும் சொத்து அவர்கள் சுமந்து திரியும் கதைகளே. ரெபேக்காவிற்கு தன் நாடோடி வாடிக்கையாளன் ஒவ்வொருவனும் ஒரு கதைசொல்லி. வாழ்க்கையை உழைத்து, உண்டு, பிரார்த்தித்து, உறங்கி முடிக்கும் ஒரு சாமானிய சமாரியப் பெண் அவள். அவளது தாய், முப்பதுவருடம் முன்பு இந்த சமாரியாவிலேயே அதிக பணம்வாங்கும் அழகியாக இருந்தவள். இன்று தன் அழகையும், அதன் புகழையும் காலம் அருந்திவிட பாலைவனம் போன்று காட்சி அளிக்கிறது அவள் வாழ்க்கை. பாலைவனமும், ரெபெக்காவும், அவளது தாயும் கைவிடப்பட்டவர்களின் அடையாளங்கள்.

தாமஸும் – செழியனும்:

இக்கதையில் தாமஸ்-ன் பங்கு மிக முக்கியம். குலப்பாடகன் ஒரு பாடும் பறவை; காற்றும், காலமும் அழித்துவிட்ட தன் மண்ணையும்,  இனத்தையும், அதன் வரலாற்றையும் ஒரு அவன் தவிர வேறு யார் நன்கு அறியக்கூடும். குலப்பாடகன் தாமஸின் பாடலும், உரையாடலும் இதையே பதிவு செய்கின்றன. சமாரியா முற்றிலும் மறந்துவிட்ட நட்சத்திரத்தையும், அது கொணர்ந்து வந்த செய்தியையும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பவன்  தாமஸ் மட்டுமே. அது அவனுக்கு ஒரு கோப்பை யாயினுக்கான வழி. தன் வாழ்வு குறித்து அவனுக்கு வருத்தம் ஏதுமில்லை. மீட்பர் குறித்த அவன் நம்பிக்கை அவனது ஆடைகளைப் போல் இற்றுப்போய்தான் இருந்தது.

‘ஒருவேளை முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஏரோது மன்னனின் வாளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்’

என்று செழியன் சொல்லக் கேட்டு, தாமஸின் இற்றுப்போன நம்பிக்கை அற்றே போனது. அதே சொற்கள், செழியனை நமக்கு இன்னும் ஆழமாய் அடையாளம் காட்டுகின்றன. விடைகாணா ஐயங்களால் கட்டமைக்கப் பட்டவன் செழியன். தேடலுக்கும் கண்டடைதலுக்கும் இடைபட்ட தூரம் ஐயங்களால் கட்டமைக்கப் படுகிறது. செழியனும் அதற்கு விதிவிலக்கு இல்லை. 30 ஆண்டுகாலத் தேடலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவனது பார்வையில் இக்கதையை புனைந்திருப்பது அபாரம். கதை முழுதும் பரவியிருப்பவன் அவனே. தேடல் மற்றும் சந்தேகத்தின் அடையாளம் செழியன்.

ஐசக்கும் – அவனது மூட்டையும்:

கதையின் கடைசி பத்தி வரை, நாம் கண்டுகொள்ளாது இருக்கும் இருவர் ரெபேக்காவின் தாயும், ஐசக்கும். இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதை தாமஸ் பின்வருமாறு சொல்கிறான்.

‘இந்த சமாரியாவிலேயே அதிக பணம்வாங்கும் அழகியாக உன் அம்மா இருந்தாள். முப்பதுவருடம் முன்பு…அதற்குமேலேகூட இருக்கும். அன்று சமாரியாவிலேயே மிகப்பெரிய வீரனாக இருந்தவன் இந்தக் கிறுக்கு ஐசக்.’

பிறர் அஞ்சும்படியும், பெண்கள் மோகம் கொள்ளும்படியும் புகழின் உச்சத்தில் இருந்து, இப்பொழுது குற்ற உணர்வு எனும் தாளா பாரத்தை சுமக்கும் மனந்திரும்பிய கொலைவீரன் ஐசக். தான் கொன்றுகுவித்த குழந்தைகளின் ரத்தம் படர்ந்த ஆடைகளை மூட்டையாக சுமந்து மீட்பு (redemption) நோக்கி ’காத்திருக்கும்’ பாவி அவன். தச்சன் மகனாய் வரும் மீட்பன் தங்களைக் கடந்து செல்கையில், ஐயம் எனும் முள்புதரின் சிறுதீற்றல் செழியனை தடுத்துவிட, மீட்பு நோக்கும் ஐசக்கோ முட்புதர்களில் சிக்கி `ஒருகணம் திகைத்து’ மீண்டும் ஓடி மீட்பனை அடைகிறான். செழியனும், ஐசக்கின் பாவமூட்டையும் ரெபேக்காவின் கடையில் கிடந்தனர்.

ஆம், இக்கதை ஐசக்-ன் காத்திருப்பும் இரட்சிப்பும் (salvation) பற்றியது. ஐசக், செழியன் இருவரோடும் என்னை வெகுவாக பொருத்திப் பார்க்க இயன்றதும், சிறு வயதிலேயே கிறித்துவம் எனக்கு  அறிமுகமாகி இருந்ததும் இக்கதையை நன்றாக உள்வாங்க உதவின. ஐசக்கின் குற்ற உணர்வும், செழியனின் ஐயமும் கொண்டவன் நான். இக்கதை எனக்கு ஒரு பெரும் மனஎழுச்சியை ஏற்படுத்தியதோடு, ஒரு திறப்பாகவும் அமைந்தது. பாலைவனத்தின் எரிவெயிலில் வாடுபவனுக்கு, சிறு முள்ளின் கீறல் ஏற்படுத்தும் ரண வேதனையின் வீரியத்திற்கு ஒப்பானது இந்த இலக்கியத் துகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம். இவ்வளவு விவரித்தும், இன்னும் சொல்லித் தீரா.

மதுவைப் போலவே, இலக்கிய அனுபவத்தையும் நிறைவு செய்வது உரையாடல்களே. இந்த பதிவின் வழியாய் உங்களோடு உரையாடவே எத்தனிக்கிறேன்; உங்கள் கருத்துகளை பகிருங்களேன். ரெபேக்காவின் கடையில் நானும் காத்திருக்கிறேன்.

பெருங்கருணை

உதிரும் இலையின் பொருட்டு

காற்றுக்கு நன்றி சொல்கின்றன மரத்தடி எறும்புகள்.

இலையைப் படகாக்கிய எறும்பை

தாலாட்டி கரை சேர்க்கிறது நதி.

இன்னும் ஒரு இலையை உதிர்க்கிறது

மரம்.

Ker 001

குற்ற உணர்ச்சி

நெல் கொத்தும் பறவையொன்றின் அலகில்
சிக்கிக்கொள்கிறது வண்ணத்தி;
வயலின் மௌனத்தில் கரைகிறது
வண்ணத்தியின் ஓலம்.

*

Painting Courtesy : Hemalatha Venkatraman
http://hemusartblog.tumblr.com/

அன்புள்ள வாரணாசி

தேவதையும் தோழனும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

அன்புள்ள வாரணாசி,

நான் பசியென்று எண்ணிய நொடியில் நல்லுணவு ஈந்தாயே.
பெரும்பனியின் போர்வை கொண்டு எனை நனைத்தாயே.
என் கால்கள் தெருவில் படாவண்ணம் ஒடித்தாங்கினாயே.
நான் எடுத்த புகைப்படத்திற்கு எல்லாம் தவறாது சிரித்தாயே.
குளிரின் பெரு நனைப்பில் தேனமுது வார்த்தாயே.

முறைத்தாய்,
சிரித்தாய்,
அணைத்தாய்,
உடன் நடந்தாய்.

நீ தேக்கிய அன்பில் சிறிதெடுத்து ஊட்டினாய்.

அடக்கவொண்ணாப் பேரன்போடும் பெருநன்றியோடும் உன்னை முத்தமிட்டுப் புறப்படுகிறேன்.
மீண்டும் வருவேன் ஓர் நாள், உன்னிடம் கண்டெடுத்த என்னைத் தொலைக்க…

பின் குறிப்பு : இது வாரணாசி எனும் ‘இடம்’ பற்றிய குறிப்பல்ல.